கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கம் நாளை அடையாள வேலை நிறுத்தம்!

சி.எஸ். ஆறுமுகம்

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்.4-ம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொறியியல் பிரிவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்ய கூடாது. மாவட்ட அளவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக அலுவலர்களை நியமித்து, அவர்களை உதவி செயற்பொறியாளர் தலைமையில் பணியாற்ற உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

          

இரண்டு ஊராட்சிகளுக்கு ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். பணிகளை நுண்ணிய அளவில் கண்காணிக்கவும் மதிப்பீடுகளை அந்தந்த மாவட்ட அளவில் ஒப்புதல் வழங்கி விரைந்து பணிகளை முடிக்க 3 மாவட்டங்களுக்கு ஒரு மண்டல மேற்பார்வை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

நகர கட்டமைப்பில் உள்ளது போல் கிராம பகுதிகளிலும் வீட்டு மனை மற்றும் புதிய கட்டிடங்களுக்கான வரைபட ஒப்புதல் அளிக்க பொறியாளர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் 8 ஊராட்சிகளுக்கு ஒரு உதவி பொறியாளர் என்ற வீகிதத்தில் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான நிரந்தரமாக ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கண்காணிக்க பெரிய மாவட்டங்களில் புதிய செயற்பொறியாளர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கிடங்குகளில், பல ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தினசரி மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு வழங்கப்படும் சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்வது, மற்றும் அதற்கான பதிவேடுகளை பராமரிப்பது, பயனாளிகளுக்கான கட்டுமான பொருட்களை தினசரி இணையதளத்தில் பதிவேடு செய்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவுட்சோர்சிங் முறையில் மத்திய பொது நிதியில் ஊதியம் வழங்க ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.4-ம் தேதி தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 1350 ஊரக வளர்ச்சி பொறியாளர்கள் பங்கேற்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT