தமிழகம்

“திமுக போல கூஜா தூக்கவில்லை... அதிமுக அடிமையில்லை!” - தருமபுரியில் பழனிசாமி பேச்சு

வெற்றி மயிலோன்

தருமபுரி: “கடன் வாங்குவதில், ஊழல் செய்வதில் தான் தமிழகம் முதல் இடம். தமிழகத்தில் 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி. ஆனால் திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார் ஸ்டாலின்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தருமபுரி, நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் பள்ளி மைதானத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தருமபுரி அதிமுகவின் கோட்டை. அதிமுகவும் பாமகவும் 2021 தேர்தலில் இணைந்து போட்டியிட்டு 100-க்கு 100% வென்ற மாவட்டம். ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம், ஆனால் தருமபுரிக்கு அதிமுகவும் பாமகவும்தான் தலைவர்கள். 2021ல் வெற்றியைக் கொடுத்தீர்கள்.

          

ஸ்டாலின் ஈரோட்டில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் வேலைக்கு போகிறார்களாம். இவர்கள் நல்லாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் குறை சொல்கிறேனாம், நாங்கள் குறை சொல்லவில்லை உங்கள் புள்ளிவிவரம் குறை சொல்கிறது. அண்டப்புழுகு பேசும் ஸ்டாலின், உங்கள் ஆட்சியின் புள்ளிவிவரம் படி பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 26,651. இதை நாங்கள் சொல்லவில்லை, திமுக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் போக்சோ 18 ஆயிரம் வழக்குகள். போக்சோவில் 6999 பேர் பாதிக்கப்பட்டதாக உங்கள் சமூகநலத்துறை அமைச்சரே சொன்னார், 84 கோடி நிவாரணம் அளித்ததாகச் சொன்னார்.

போக்சோ என்றால் சிறுமிகள் பாதிக்கப்படும் வழக்கு. உண்மை இப்படி இருக்கும்போது ஸ்டாலின் வடிகட்டிய பொய், அதுவும் ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் பேசுகிறார். தினந்தோறும் பத்திரிகை பார்த்தால் இதுதான் செய்தி. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாதிப்பு. இப்படிப்பட்ட வெட்கம் கெட்ட ஆட்சியில், வேண்டுமென்றே அவதூறு என்று சொல்கிறார். இது உண்மையா?.

அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தைத்தான் நான் சொல்கிறேன். நாம் இதை சொன்னால் பொள்ளாச்சியை சொல்வார், பொள்ளாச்சி சம்பவத்தில் நியாயமான விசாரணைக்கு சிபிஐக்கு உத்தரவிட்டது அதிமுக அரசு. உங்கள் அரசு போல கேடுகெட்ட அரசு அதிமுக அரசு இல்லை.

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அரசு திமுக அரசு. உண்மை குற்றவாளிகளைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றம் சென்றார். அதேபோல் அண்ணா பல்கலையில் பாலியல் சீண்டல், யார் அந்த சார்? அதிமுக ஆட்சியில் அந்த சார் கண்டுபிடிக்கப்படுவார். காவல் பெண் அதிகாரி ஏடிஜிபி, காவல் ஆய்வாளர் தேர்வில் முறைகேடு என்று விசாரணை நடத்திவந்தார், அவர் அலுவலகத்தில் தீ வைத்துக் கொளுத்திய அரசு பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அரசா?

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸார் புகாரை எடுக்கவே இல்லை, இப்படி வெட்கம் கெட்ட அரசு தேவையா? இதையெல்லாம் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

இபிஎஸ் பாஜகவுக்கு அடிமையாம், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி கூட அடிமை கிடையாது. நாங்கள் நியாயத்துக்குப் போராடுவோம் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம். உங்களை போல கூஜா தூக்கும் கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டார், ஆளுங்கட்சியானதும் வெள்ளைக் குடை பிடித்தார், இது அசிங்கமாக இல்லயா?

மூன்று முறை பிரதமரை சென்னைக்கு அழைத்து மத்திய அரசு திட்டத்துக்காக வந்தார், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தீர்கள். அப்போது எல்லாம் பிரதமரின் தயவு தேவை. பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று என இரட்டை வேடம் போடும் தலைவர்.

நாங்கள் அடிமையில்லை. காவிரி நீதி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். கூட்டணியில் இருந்தபோதும் விவசாயிகள் பிரச்சினை என்பதால் போராடினோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைக்கு முழு வடிவம் கொடுத்தோம். உங்களால் முடியுமா?

2021 தேர்தலில் நீட்டுக்கு விலக்கு பெறுவோம், ரகசியம் தெரியும் என்றார் உதயநிதி. ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா? நாடாளுமன்றத்தில் பேசினீர்களா..? 2024 எம்பி தேர்தலில் திமுக கூட்டணி 39 இடத்திலும் வென்றோம் என்று மமதையில் பேசுகிறார், அந்த 39 எம்.பி.க்களும் பெஞ்ச்சை தேய்க்கிறார்களா? .நீட்டுக்கு குரல் கொடுத்தீர்களா? எங்களை போல தமிழக பிரச்சினைக்கு குரல் கொடுக்க திராணி இருந்ததா? அவையை ஒத்திவைக்க முடிந்ததா? தில்லு திராணி இல்லாத கட்சி திமுக.

போதை பொருள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. எங்கே பார்த்தாலும் கஞ்சா. திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்தது. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்தேன். பேட்டி கொடுத்தோம், எதுவும் நடக்கவில்லை.

எல்லாவற்றிலும் முதன்மையான அரசு திமுக என்கிறார் ஸ்டாலின். கடன் வாங்குவதில், ஊழல் செய்வதில் தான் முதல் இடம். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டும்தான். ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT