மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை பர்லியாறு அருகே முறிந்த மரங்களை அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.
குன்னூர் / கோவை: கனமழை காரணமாக ஊட்டி மலைப்பாதையில், மண் சரிவில் அரசு பேருந்து சிக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் நடத்துநர் மீட்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்ததால், மலைப்பாதைகளில் இரவு நேரப்பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையே ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பாலடாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஜனகராஜ் (50) பேருந்தை ஓட்டினார். கோத்தகிரியைச் சேர்ந்த நடத்துநர் கேசவன் மற்றும் 6 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
பர்லியாறு சோதனைச் சாவடியைக் கடந்தபோது, திடீரென மண் சரிவு ஏற்பட்டு மரம் ஒன்று பேருந்தின் முன்பகுதியில் விழுந்தது. இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனடியாக இறங்கினர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் இறங்குவதற்குள் மீண்டும் பெரிய அளவில் மண் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்து நொறுங்கியதால் இருவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
பர்லியாறு அருகே மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து, உயிரிழந்த ஓட்டுநர் ஜனகராஜ்
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அதிகாலையில் ஓட்டுநர் ஜனகராஜ் சடலமாக மீட்கப்பட்டார். காயமடைந்த நடத்துநர் கேசவன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மண்சரிவு குறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் வே.சம்பத்குமார், கமலி, மாவட்ட ஆட்சியர்கள் பவன்குமார் கிரியப்பனவர் (கோவை), லட்சுமி பவ்யா (நீலகிரி), மேற்கு மண்டல ஐஜி ஆர்.வி.ரம்யா பாரதி, கோவை சரக டிஐஜி சுவாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டிஉள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரித்தப்படுத்தினர். அரசு பேருந்து மண் சரிவில் சிக்கிய பகுதிக்கு அருகே 2 ஆம்னி பேருந்துகளில் சுற்றுலாவுக்கு வந்திருந்திருந்த 266 கேரள மாணவ - மாணவிகள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
கனமழையால் மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் 13 இடங்களிலும், மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் 3 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறும்போது, “கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் 3 நாட்களுக்கு இரவு நேரப்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கொடைக்கானலிலும் பாதிப்பு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மரங்களும் முறிந்து சாலையில் விழுந்தன.
அடுக்கம் – பெருமாள்மலை, அடுக்கம் – பெரியகுளம் சாலைகளில் 2 இடங்களில் வெள்ளத்தில் சாலை அரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால், இன்று ஒரு நாள் மட்டும் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.