சென்னை: முதல்வரின் அறிவிப்பை ஏற்று சென்னையில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது.
இதற்கிடையே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் கடந்த ஜன.6ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே போராட்டத்தின் போது, பெரம்பலூரைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன்பின் பகுதி நேர ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பன உட்பட சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நியமன தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இதையேற்று போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக கூட்டுக்குழு அறிவித்தது. அதே நேரம் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என மற்றொரு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் 30-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீஸார் கைது செய்தனர். நிரந்தரத் தீர்வு காணும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.