

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட தேர்தல் நகர்வு குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், எந்தெந்த தொகுதியை கேட்டுப்பெற வேண்டும், பிரச்சாரம் கூட்டங்களை தொடங்குவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்து திமுக தலைமையிடம் வழங்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு உருவாக்கப்பட்டு, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. கட்டணமாக ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தனர். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு கண்டனம், ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏற்புடையதல்ல உட்பட 12 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபடியால் தான் தேர்தல் ஆணையத்திடம் முதலிலேயே விண்ணப்பித்து சின்னத்தை பெற்றிருக்கிறோம். தேர்தல் ஆணையமும் நாங்கள் இதற்கு முன்பு 2 பொதுத்தேர்தல்களிலும் எப்படி போட்டியிட்டு இருக்கிறோம் என்பதை பார்த்து தற்போது ‘டார்ச் லைட்’ சின்னத்தை எங்களுக்கு மீண்டும் ஒதுக்கியுள்ளது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. இக்கூட்டணி தமிழக மக்களுக்கானது. 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றிபெறும். தவெக தலைவர் விஜய்க்கு அடுத்தபடியாக ஊடகங்களை தவிர்க்கும் தலைவராக கமல்ஹாசன் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. அவர் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார். செயற்குழு கூட்டத்தில், தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டுமென விருப்பமனுவை கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.