சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக ஆளுநர் உரையில் தமிழக அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகம் கடந்த நிதியாண்டில் 11.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும். பொங்கல் திருநாளையொட்டி 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட ரூ.6,936 கோடி மதிப்பிலான பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்துதல், ஆக்சிஜன் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகளை உறுதி செய்தல் போன்ற போர்க்கால நடவடிக்கைகளால், தமிழகம் கரோனா பிடியிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இந்தச் சாதனை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். ‘மகளிர் விடியல் பயணம்’ மூலம் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர். சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க இதுவரை ரூ.33,464 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு வரும் பெண்கள் நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியைப் பெற 19 தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களை அதிகமாகக் கொண்ட (40.3 சதவீதம்) மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 4.9 லட்சம் ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகையை உறுதி செய்யும் வகையில், 19.34 லட்சம் குழந்தைகள் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் தொல்குடி திட்டங்களின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தலா ரூ.1000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. அம்பேத்கர் அயலக கல்வித் திட்ட நிதி ரூ.36 லட்சமாக உயர்த்தப்பட்டு, 385 மாணவர்கள் வெளிநாடுகளில் பயின்று வருகின்றனர். ‘காலனி’ என்ற சொல் ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்தின் மூலம் 1,026 ஆதிதிராவிடப் பெண்களுக்கு ரூ.50 கோடி மானியம் அளிக்கப்பட்டு, அவர்கள் நில உடைமையாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
27.55 லட்சம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த இதுவரை 3 லட்சம் இலவச வீட்டுமனை இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான அறவுணர்வுப் பயிலரங்கங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.