தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்த ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் பேரவை மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தருமபுரி: 6 மாத கால தவெக ஆட்சி தமிழகத்தை 6 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது, என தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும் பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கந்தசாமி வரவேற்றார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோகன் (கிழக்கு), டி.ஆர்.அன்பழகன் (மேற்கு), எம்எல்ஏ-க்கள் மரகதம் வெற்றிவேல், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய்யின் அனுபவமின்மையால் தவெக-வின் 6 மாத கால ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. கொலைகள், லாக்கப் மரணங்கள், போதைப் பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து நடக்கிறது. தான் ஆட்சிக்கு வந்தால் இவ்வகை செயல்கள் நடக்காமல் தடுப்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார் விஜய்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம், ‘எங்களுக்கு சாரி வேண்டாம் சி.எம். சார்’ என்று பேசிய விஜய், தங்கள் ஆட்சியில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நியாயப்படுத்த பார்க்கிறார்கள். தவெக ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், ஆலோசகர்கள், நிழல் முதல்வர் என யாருக்குமே அனுபவம் இல்லை. தமிழகத்தில் காணப்படும் போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக போலீஸாரால் பிடிக்கவும், தடுக்கவும் முடியவில்லை. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தான் பிடிக்கின்றனர். மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு யூனிட் ரூ.13-க்கு கிடைக்கும் மின்சாரத்தை ரூ.43-க்கு வாங்குகிறார்கள். விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. 6 மாத காலம் தான் ‘ப்ரீத்திங் டைம்’ என எடுத்துக் கொள்ள முடியும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய திமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவில்லை. தற்போதைய தவெக அரசாவது செயல்படுத்தும் என நம்புவோம். சோனியாகாந்தி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய்க்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சோனியாகாந்தியிடம் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேசியிருக்கலாம்.
எனக்கு மரியாதை வழங்குவதை விட எங்கள் மாநிலத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்துங்கள் என கேட்டிருக்கலாம். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காங்கிரஸ், சிவகுமார் காங்கிரஸ், தாகூர் காங்கிரஸ் என 3 பிரிவுகள் உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால் கற்காலத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.