தமிழகம்

சென்னையில் எங்கே அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

அடையாளம் காணப்பட்டுள்ள 3 இடங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இதற்காக மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மூன்று இடங்களில் இறுதியாக முடிவு செய்யப்படும் இடத்தை இம்மாத நடுப்பகுதிக்குள் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருந்த இடம். இந்த மூன்று இடங்களையே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒவ்வொரு இடமும் அதற்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டுள்ளன. கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் பகுதியானது, ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்கு எதிரே உள்ளது. இங்கு அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, எளிதில் செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. இந்த பகுதியில்தான் 43 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ல் அடிக்கல் நாட்டினார். எனினும், இதன் அருகில்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இது கருதப்படுகிறது.

பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை இப்பகுதிக்கு அகலமான சாலை வசதி இல்லை. அதோடு, நகரின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதேபோல், நந்தம்பாக்கத்துக்கான சாலைகளும் அகலமானவை அல்ல. அதேநேரத்தில், எளிதில் சென்றடையக்கூடிய வகையில் நகரின் மையப் பகுதியில் இது உள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளும் இங்கு விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு:

கிழக்கிந்திய கம்பெனியால் சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்துக்காக வாங்கப்பட்ட நிலத்தில் கடந்த 1640-ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1644-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இது 1652-ல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகளாக தமிழக அரசின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டுக்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதம் உள்ள நிலப்பரப்பு இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை.

தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டிடங்களில் செயல்படுகிறது. இதில் பிரதானக் கட்டிடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை, ஆளுநரின் இருப்பிடமாகக் கட்டப்பட்டது. இங்கு சட்டப்பேரவை, முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலரின் அறைகள், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் செயல்படுகின்றன.

இந்த வளாகம் 2.07 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ளது. விரிவடைந்துவரும் நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ம் ஆண்டு 3.75 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், அலுவலர்கள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக நிர்வாக நலன் கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசுத் துறைகளின் பணியாளர்கள் எண்ணிக்கையும், நிர்வாகப் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. இருப்பினும், தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்கநிலை அடைந்துள்ளது. மேலும், கோட்டையில் உள்ள மற்ற இடங்கள் பாதுகாப்புத் துறை, ஏஎஸ்ஐ நிலமாக இருப்பதால் கூடுதல் கட்டிடங்கள், மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந்தச் சூழலில், தமிழகத்தின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்துக்கும் உலகத் தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது அவசியமாகிறது.

புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு, மாற்றுத் திறனாளிகள் சென்றுவர வசதிகள், பசுமைக் கட்டிட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடம், மாநாட்டு அரங்குகள், மக்கள் சேவை மையங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். வருங்காலத் தலைமுறையினர் அறியும் வகையில் கோட்டையின் பாரம்பரியக் கட்டிடங்கள் வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும்.

அடுத்த 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

SCROLL FOR NEXT