தமிழகம்

தமிழ்நாடு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

மோகன் கணபதி

சென்னை: தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.

எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.

நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்படி சென்னை மாகாணத்தின் பெரும் பகுதிகளையும், அண்டை மாநிலங்களின் சில பகுதிகளையும் இணைத்து தமிழ்நாடு என்றழைக்கப்படும் இன்றைய நிலப்பரப்பு 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி இதே நாளில் தான் உருவாக்கப்பட்டது. அதைக் குறிக்கும் வகையில் 70-ஆம் ஆண்டு தமிழ்நாடு நாளைக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நாள் எது என்பதிலேயே குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலை ஏற்று நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதே நல்லத் தொடக்கம் தான். இனி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதே நடக்கும்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட, அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்கள் என்று நாம் உறவு கொண்டாடினாலும் கூட அவற்றிடம் நாம் ஆற்று நீர் உரிமைகளை இழந்திருக்கிறோம். அண்டை நாடுகளிடம் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம். சமூகநீதியை பாதுகாப்பதற்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் கூட கடந்த காலங்களில் பயன்படுத்தப்படாமல் போனது.

தமிழ்நாட்டின் உயிர்மூச்சுக் கொள்கை சமூகநீதி தான்; தமிழ்நாட்டின் இன்றையத் தேவை வளர்ச்சி தான். இந்த இரண்டும் தனித்தனியானவை அல்ல. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை தான். அதனால் சமூகநீதி உள்ளிட்ட தமிழகம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்கவும், அதன் வாயிலாக தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைப்பதற்காகவும் கடுமையாக உழைக்க தமிழ்நாடு நாளான இன்று அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.” என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவி்ல, “மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு எனும் தனித்துவமான மாநிலம் உருவான நாளை கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு என்ற அடையாளத்திற்காகவும், தமிழ் மொழியின் உரிமைக்காகவும் தங்களின் இன்னுயிரையும் துச்சமென கருதி போராடிய தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவுகூறும் இந்நாளில் தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழ்நாடு. இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT