சென்னை: ஆளுநர் உரை, பட்ஜெட், அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம், பொங்கல் பரிசு உள்ளிட்டவை குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் இடம் பெற வேண்டியவை குறித்து அமைச்சரவையில் முடிவெடுத்து, அதனடிப்படையில் உரை தயாரிக்கப்பட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேற்று முன்தினம் இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு செயல்படுத்த உள்ள ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அறிவிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். நடப்பாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்கள் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ரொக்கப் பணம் எவ்வளவு கொடுப்பது என்பது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது.
இவை தொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவுஎடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 6-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் விவகாரம் மற்றும் புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது.