

சென்னை: நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 19,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் பந்தயங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'இந்து தமிழ் திசை' சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!