பாஜக அலுவலகம்
'திராவிடமாடல் என்ற மாயையை தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர்' என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகக் கூறிக் கொள்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. உண்மையில், 345 வாக்குறுதிகள் மீது எந்த முன்னேற்றமும் இல்லை. 160 வாக்குறுதிகள் மட்டுமே அரைகுறையாகத் தொடங்கப் பட்டுள்ளன. முக்கியமான 9 வாக்குறுதிகள் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளன.
தமிழகத்தில் வாரிசு அரசியல், சாதிய வாதம் மற்றும் வகுப்பு வாதம் ஆகியவை மாநில முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு திட்டத்திலும் 20 சதவீதம் ஊழல் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து, நிர்வாகத் திறமையின்மை நிலவுகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் உள்கட்டமைப்பு வசதிகள் சிதைந்து குறைந்துவிட்டது.
அவசர நிலை காலத்தில் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டது, சர்க்காரியா கமிஷன் மூலம் கருணாநிதியை ஊழல் வாதியாக சுட்டிக்காட்டியது போன்ற வரலாறுகளை மறந்துவிட்டு இன்று காங்கிரஸும் திமுகவும் கைகோத்துள்ளன. இந்த 'திராவிட மாடல்' என்ற மாயையை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டனர். எனவே, 2026 தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக- பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் ‘இரட்டை எஞ்சின்' ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.