மகா சுசீந்திரன்
மதுரை: தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் இன்று அனுப்பிய கடிதத்தின் விவரம்: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உழைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தேன். மதுரை புறநகர், மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்துள்ளேன்.
நாடு முழுவதும் 22 மாநிலங்களுக்கு மேல் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதிலும், தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக பாஜகவின் அரசியல் சூழ்நிலையால், என்னைச் சார்ந்த மக்களிடம் தாமரைக்கான வாக்கு வங்கியை உயர்த்த முடியவில்லை என்ற கடுமையான மனவருத்தத்தோடு பதவியை ராஜினாமா செய்கிறேன்.
மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் குறைந்தபட்சம் பாஜக தொண்டர்களின் அவசர அலைபேசி அழைப்பையாவது எடுத்து, அவர்களது மனக்குறைகளைக் கேட்டு ஆறுதல் கூற வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மீண்டும் வளரும். இது எந்த எதிர்பார்ப்புமின்றி தாமரைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பல லட்சம் தொண்டர்களின் கருத்தாகும்; அதுவே என்னுடைய கருத்தும் ஆகும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.