பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் கூறியதாவது: பேரவையில் நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் 6-ம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் மீதான விவாதம், பதில் உரை 4 நாட்கள் நடைபெறும். 7-ம் தேதி (நாளை) மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து, அன்றைய விவாதம் தொடங்கப்படும். 8, 9-ம் தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறை. 10 முதல் 12-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், நிறைவு நாளில் அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். அரசினர் சட்ட மசோதாக்கள் இருந்தால், ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.
அதன்பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் ஆக.17 முதல் செப்.8-ம் தேதி வரை நடைபெறும். இதில் முதல்வர் விஜய்யின் பதில் உரை செப்.7-ம் தேதி இடம்பெறும்.
இருக்கைகளை மாற்றித் தருமாறு சில உறுப்பினர்கள் கோரி உள்ளனர். விதிகளின்படி, கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த கட்சியின் உறுப்பினராகவே அவர்கள் கருதப்படுவார்கள். அதற்கு ஏற்பவே இருக்கைகளும், பேசுவதற்கு நேரமும்வழங்கப்படும். தனி சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தால் தனியாக பேச அனுமதி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி பழனிசாமிதான் அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
21 நாட்கள் நடைபெறும்: நேற்று (ஆக.5) தொடங்கியுள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் செப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும், இடைப்பட்ட நாட்களில் வரும் அனைத்து சனி, ஞாயிறும் பேரவை நடைபெறாது. அதே போல, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.13 முதல் 15 வரையும், மிலாடி நபிக்காக ஆக.26-ம் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக செப்.4-ம் தேதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 21 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளன.