திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மெய்யநாதன், சேகர்பாபு.
சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருது, முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புக்கு தமிழ்த் தென்றல் திருவிக விருது உட்பட 13 பேருக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விருதாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் விருதுத் தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் கவுரவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுவர் தினம்: தமிழ்ப் புலவர்கள், அறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தைத் திங்கள் 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாக கடைபிடிக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அவரைப் பின்பற்றி, தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் விதமாக, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
10 விருதாளர்கள்: 2026-ம் ஆண்டுக்கு முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கு வழக்கறிஞர் அருள்மொழிக்கு தந்தை பெரியார் விருது, விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது, நீர்வளம், சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருது, எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது,கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு மகாகவி பாரதியார் விருது, கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புவுக்கு தமிழ்த் தென்றல் திருவிக விருது, முனைவர் சு.செல்லப்பாவுக்கு முத்தமிழ்க் காவலர் கிஆபெ. விசுவநாதம் விருது, எழுத்தாளர் விடுதலை விரும்பிக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பேருக்கும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது: பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றும் தமிழ்த் தாயின் அறிஞர் பெருமக்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய 3 பிரிவுகளில் ‘இலக்கிய மாமணி’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கு மரபுத் தமிழ் பிரிவில் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம், ஆய்வுத் தமிழ் பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எழுத்தாளர் சி.மகேந்திரன், படைப்புத் தமிழ் பிரிவில் இரா.நரேந்திரகுமார் ஆகிய 3 பேருக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் வழங்கினார்.
அனைத்து விருதாளர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் விருதுத் தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் கவுரவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மெய்யநாதன், மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.