நயினார் நாகேந்திரன்
சென்னை: “நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்த மதுரை தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மதுரையில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை முறைகேடாக நலத்திட்ட உதவியாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. அரசு வழங்கும் இலவச அரிசியை தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்.
விநியோகிக்கப்பட்ட பைகளில் துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி இருந்ததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அரிசியைப் பறிமுதல் செய்து ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனவே, புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உரிய விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.