தமிழகம்

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டி ஏரி: புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் / காஞ்சிபுரம்: தொடர் மழை​யால் பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் வாய்ப்​புள்​ள​தால், மீண்​டும் உபரி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய வானிலை ஆய்வு மையம், திரு​வள்​ளூர் மாவட்​டத்​துக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை தொடர்ந்து விடுத்து வரு​கிறது. இதனால், சென்னை குடிநீர் ஏரி​களில் முக்​கிய ஏரி​யான பூண்டி ஏரியி​லிருந்து கடந்த நவ.27-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்​தது. சில நாட்​கள் கழித்து நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து படிப்​படி​யாக குறைந்​த​தால், உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பெய்து வரும் தொடர் மழை​யால், பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்​வரத்து உள்​ளது. நேற்று காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 2,540 கனஅடி நீர்​வரத்து இருந்​தது. இதனால், 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு மற்​றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர் இருப்பு 2,851 மில்​லியன் கனஅடி​யாக​வும், நீர்​மட்ட உயரம் 34.09 அடி​யாக​வும் இருந்​தது.

ஆகவே, பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் உள்​ள​தால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, நேற்று காலை 8 மணி​யள​வில் பூண்டி ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பெய்து வரும் தொடர் மழை​யால் புழல் ஏரி, முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் இருந்​த​தால், நேற்று முன் தினம் மதி​யம் முதல், புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

நேற்று மாலை 5 மணி முதல், 2,500 கனஅடி உபரிநீர் திறக்​கப்​படு​கிறது. சோழ​வரம் ஏரியி​லிருந்து தற்போது விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

ஊத்​துக்​கோட்டை அருகே ஆந்​திர மாநில பகு​தி​யில் ஆரணி ஆற்​றின் குறுக்கே உள்​ளது பிச்​சாட்​டூர் அணை. 1.85 டி.எம்​.சி. கொள்​ளளவு கொண்ட இந்த அணை, மழை​யால் முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் உள்​ளது. தற்​போது விநாடிக்கு 800 கனஅடி உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

பிச்​சாட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​பட்​டுள்ள உபரிநீர் இன்று தமிழக எல்​லை​யான ஊத்​துக்​கோட்டை பகு​திக்கு வந்​தடை​யும் என, எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக நீர்வள ஆதா​ரத் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர் வட்​டத்​தில் அமைந்​துள்ள செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் மொத்த கொள்​ளளவு 3.645 டிஎம்சி (3645 மில்​லியன் கன அடி) மற்​றும் அதன் மொத்த ஆழம் 24 அடி ஆகும்.

இந்த ஏரி​யில் நேற்​றைய நில​வரப்​படி ஏரி​யில் 3.135 டிஎம்சி நீர் இருப்பு உள்​ளது, இது 22.06 அடி ஆழமாகும். மேலும், ஏரிக்கு நீர்​வரத்து விநாடிக்கு 1,400 கனஅடி​யாக உள்​ளது. விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.செம்​பரம்​பாக்​கம் ஏரி​யில் ஆட்​சி​யர் கலைச்​செல்​வி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்​வின்​போது, ஸ்ரீபெரும்​புதூர் வரு​வாய் கோட்​டாசி​யர் சி.​பாலாஜி, குன்​றத்​தூர் வட்​டாட்​சி​யர் சேரன்​தயன், நீர்​வளத் துறை உதவி பொறி​யாளர் தனசேகரன் உடன் இருந்​தனர். காஞ்​சிபுரத்​தில் பெய்த தொடர் மழை காரண​மாக காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் 14 ஏரி​கள் நிரம்​பி​யுள்​ளன.

SCROLL FOR NEXT