புதுடெல்லி / சென்னை: தென்பெண்ணை நீர் பங்கீட்டுப்பிரச்சினைக்கு, நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
கர்நாடகத்துடன் தென்பெண்ணை நீர் பங்கீடு பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தை அமைக்கவும், நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேயா நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு கடந்த நவ.19-ம் தேதி விசாரித்தது. இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட மத்தியஸ்த குழு மூன்று முறை ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, தென்பெண்ணை நீர் பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றத்தை அமைப்பதே தீர்வாகும் என தமிழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய நீர்வளத் துறையின் சார்பில் ஏற்கெனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது’ என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், ‘‘தென்பெண்ணை நீர்பங்கீடு பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைத்து, அது குறித்த ஆணை அரசிதழில் வெளியிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
அமைச்சர் துரைமுருகன் அறிக்கை: இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பெண்ணையாறு மற்றும் அதன் கிளை நதியான மார் கண்டேயா நதி 1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்துக்கு உட்பட்ட நதி என்பதால், கர்நாடக அரசு அதன் குறுக்கே கட்டுமானங்களை மேற்கொள்ள தமிழகத்தின் இசைவை பெற வேண்டும்.
ஆனால் தன்னிச்சையாக கர்நாடக அரசு மார்கண் டேயா நதி குறுக்கே எர்கோல் கிராமத்தில், பங்காரப்பேட்டை தாலுகாவில் கட்டும் அணையையும் மற்றும் பெண்ணையாற்றிலிருந்து சில நீரேற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க ஆணையிடுமாறும் உச்ச நீதிமன்றத்தில் 2018, மே 18-ம் தேதி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது இதில் உச்ச நீதிமன்றம் 2019 நவ.14-ம் தேதி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், மத்திய ஜல்சக்தி அமைச்சகம், ஓர் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக் குழுவை 2020 ஜனவரியில் அமைத்தது. இக்குழு 2020 ஜூலை 31-ம் தேதி தனது இறுதி அறிக்கையில், நடுவர் மன்றத்தை ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கலாம் என பரிந்துரைத்தது.
ஆனால், மத்திய அரசு நடுவர்மன்றம் அமைப்பதை தாமதித்து வந்தது. இந்நிலையில், இந்த அரசு பதவி ஏற்றதும், மத்திய நீர் வளத்துறை அமைச்சரை கடந்த 2021 ஜூலை 6-ம் தேதி நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க கேட்டுக்கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதங்கள் வாயிலாகவும் நடுவர் மன்றம் அமைக்க கோரப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், மத்திய அரசு, நடுவர் மன்றம் அமைப்பதை எந்த முகாந்திரமும் இல்லாமல் தாமதப்படுத்தியது.
அதோடல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை குழு அமைக்க கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் 2024 ஜன.23-ம் தேதி உத்தரவின்படி, 2-வது பேச்சுவார்த்தைக் குழுவை, ஜல்சக்தி அமைச்சகம் பிப்.7-ம் தேதி அமைத்தது. இச்சூழலில் மீண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை 2024 ஜூலை 25-ம் தேதி சந்தித்து நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தினேன்.
இரண்டாவது பேச்சுவார்த்தைக் குழு, பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பதை தனது இறுதி அறிக்கையில் அதே ஆண்டு நவ.30-ம் தேதி சமர்ப்பித்தது. மத்திய அரசு நடுவர் மன்றம் அமைப்பதை மேலும் தாமதித்து வந்ததால் கடந்த 2025 செப். 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கினை விரைவில் விசாரிக்க கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பிப்.2-ம் தேதி (நேற்று) அளித்த தீர்ப்பில், பெண்ணையாறு பிரச்சினையை தீர்ப்பதற்காக, ஒருமாத காலத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், தமிழக அரசு தொடர்ந்து அனைத்து தேவை யான நடவடிக்கைகளையும் எடுத்து விரைவில் பெண்ணையாறு மற்றும் மார்கண்டேயா நதிநீரை பெற்று, குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைகளுக்காக நம்பியுள்ள மக்களின் நலன்களை பாதுகாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.