புதுடெல்லி / சென்னை: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ள கட்டுமானங் களை முழுமையாக இடித்து அகற்ற அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங் களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, ‘மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது. அந்த மக்களை அங்கிருந்து அப்புறப் படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறைகளாக அந்த பகுதியிலேயே வசித்து வருபவர்கள், எனவே, அவர் களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப் பட்டு, அதன் பின்னர் அப்புறப்படுத்தப்படுவர்.
பாது காக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கிவந்த விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த 3 மாதங்கள் கால அவகாசம் வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பின்னர், நீதிபதிகள் கூறுகையில், ‘பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது, அவற்றின் கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்.
எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க முடியாது. இலவம் பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யாருக்கும் நிலத்துக்கான பட்டா வழங்கக் கூடாது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை, கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் துணை ராணுவப் படையை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டியது வரும்’ என்று கூறினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.பரமேஸ்வர் கூறுகையில், ‘புலிகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இன்னும் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன.
பல ஓய்வுபெற்ற தமிழக அதிகாரிகளும் வனப்பகுதியில் நிலங்களை ஆக்கிரமித்துள் ளனர். கட்டுமானம் தொடர்பாக அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் திரும்ப வந்துள்ளன’ என்றார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
மேகமலை புலிகள் சரணா லயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை 2 வார காலத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, விசாரணையை செப்.8-க்கு தள்ளி வைத்தனர்.