சென்னை / புதுடெல்லி: தமிழகத்தில் சிலை திருட்டு வழக்குகளின் விசாரணை நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் மற்றும் வழக்கின் கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.யோகேஷ்வரன் ஆஜராகி, சிலைக் கடத்தல் வழக்கின் 41 ஆவணங்கள் மாயமாகியுள்ளன, இதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோல, திருடப்பட்ட பழமையான சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளன. அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றார்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் பி.கருணாகரன், “சிலை திருட்டு வழக்கை கையாள சிறப்பு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இதுகுறித்த தகவல்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய 4 வார அவகாசம் வேண்டும்” என்றார்.
இதனிடையே, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் ஆஜராகி, சிலை கடத்தல் விவகாரம் பல மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் சிலை திருட்டு வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் சிலை திருட்டு வழக்கின் ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் எடுக்கப்படுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.