சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை நிர்வாகத்தை கவனிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோரைக்கொண்ட இடைக்கால நிர்வாகக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனை உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோரை அலுவல்சாரா உறுப்பினர்களாகவும் நியமித்தது. மேலும் கோயிலின் அன்றாட வரவு-செலவு கணக்குகளை பொது தீட்சிதர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி நிர்வாகக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜெயசூர்யா, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 26-வது பிரிவின்படி கோயிலை நிர்வகிப்பதற்கு தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அந்த உரிமையில் தலையிடுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
தீர்ப்பு வெளியானதும் அதை வரவேற்று, சிதம்பரம் கீழவீதியில் பொது தீட்சிதர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.