புதுச்சேரி: குறைந்த விலையில் தங்கம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி

11 பேர் மீது சிபிசிஐடி வழக்கு
புதுச்சேரி: குறைந்த விலையில் தங்கம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி
Updated on: 
1 min read

புதுச்சேரி: சதுரங்க வேட்டை பட பாணியில் குறைந்த விலையில் 6 கிலோ தங்கம் வாங்கித் தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீன் அலெக்சாண்டர் என்பவரிடம், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் அணுகியுள்ளது. தங்களுக்கு சுங்கத்துறை மற்றும் தங்க வியாபாரிகள் தொடர்பு இருப்பதாகவும், கிலோ கணக்கில் தங்கத்தை குறைந்த விலையில் பெற்றுத் தர முடியும் எனவும் நம்பும்படி கூறியுள்ளனர். பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கலாம் என தூண்டில் போட்டனர்.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடப்பது போல் முதல் கட்டமாக 353 கிராம் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி தந்தனர். அதையடுத்து அவரது ஆசையை தூண்டி 500 கிராம் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி தந்தவுடன் தொழிலதிபர் நம்ப தொடங்கினார். அடுத்து 6 கிலோ தங்கம் வாங்கி தருவதாக இக்கும்பல் கூறியது.

இதை நம்பிய தொழிலதிபர் பிரவீன் அலெக்சாண்டர் பல்வேறு தவணைகளாக ரூ.2 கோடியே 80 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் தங்கம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளது. அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் பிரவீன் அலெக்சாண்டர் புதுச்சேரி சிபிசிஐடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் 11 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி: குறைந்த விலையில் தங்கம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி
கரூர் கோயில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

X