மதுரை நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழாவில் பேசுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த். படம்: நா.தங்கரத்தினம்.

 
தமிழகம்

“தரமான நீதி வழங்க நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் திறனும் தேவை” - தலைமை நீதிபதி சூர்யகாந்த்

கி.மகாராஜன்

மதுரை: ‘நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில் திறனும் இணைந்தால் உயர் தரமான நீதி வழங்க முடியும். இந்த ஒருங்கிணைப்பு மக்களுக்கு தரமான நீதியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடியில் 18 நீதிமன்ற அறைகளுடன் கட்டப்பட்டுள்ள 3 மாடி கூடுதல் நீதிமன்ற கட்டிடம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் விருந்தினர் மாளிகையின் திறப்பு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எம்.தர்மாதிகாரி தலைமை வகித்தார். நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார்.

புதிய கட்டிடங்களை திறந்து வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்து பேசியதாவது: மாவட்ட நீதிமன்றங்கள் என்பது நாட்டின் நீதி அமைப்பின் முதுகெலும்பாக விளங்குகிறது. உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சட்டத்தை வடிவமைத்தாலும், அதற்கு உயிரோட்டத்தை வழங்குவது மாவட்ட நீதிமன்றங்களே. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் நீதித்துறையின் கண்ணியத்தை உயர்த்தும். புதிய கட்டிடங்கள் தேவையற்ற முறையில் வழக்குகளை ஒத்திவைப்புகளை தவிர்க்க உதவும். இதன் மூலம் நீதித்துறையின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் வலுப்பெறும்.

புதிய கட்டமைப்புகள் நீதி நிர்வாகத்தின் தரத்தை உயர்த்தும். நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு தேவையான வசதிகளை உருவாக்குவது அவசியமானதாகும். இந்த கட்டமைப்புகள் வெறும் கான்கிரீட் மற்றும் இரும்பால் ஆனவை அல்ல. நீதித்துறை அமைப்புகள் உயிருடன் செயல்பட்டு, மக்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன என்பதற்கான சின்னங்களாகும்.

மதுரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நேர்மை மற்றும் தொழில் நெறிமுறைகளை கடைபிடித்து சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலங்களில் சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பாக மதுரை அமர்வு குற்றவியல், உரிமையியல் மற்றும் அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி முன்னணியில் உள்ளது. நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில் திறனும் இணைந்தாலே உயர்தரமான நீதி வழங்க முடியும். இந்த ஒருங்கிணைந்த முயற்சியே பொதுமக்களுக்கு தரமான நீதியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ.கே.மகேஸ்வரி பேசுகையில், நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உயிர் அளிப்பது நீதிபதிகள், வழக்கறிஞர்களின் கடமையாகும். நீதிமன்றம் உண்மையான நீதியின் ஆலயமாக மாறுவது வழக்கறிஞர்கள் நேர்மையுடன் வாதிடும்போதும், அதை நீதிபதிகள் பொறுமையுடன் கேட்டு நியாயமான தீர்ப்பளிக்கும் போது மட்டுமே சாத்தியமாகிறது. நீதிபதிகள், வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் நீதித்துறையின் தரத்தை பிரதிபலிக்கிறது. தற்போது நீதித்துறையில் இ-பைலிங், கணொளி விசாரணை என தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் எளிதில் அணுகக் கூடியதாகவும், பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். நீதிமன்றம் கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் போதாது, வழக்குகளை பட்டியலிடுவது, நோட்டீஸ் அனுப்புவது, கோப்புகளை நகர்த்துவது தாமதம் இல்லாமல் நிகழ வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், கட்டிடம் கட்டுவது மட்டுமே முக்கியமல்ல; அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். கண்ணகி, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க நேரடியாக அரண்மனைக்கு சென்றது நீதியை அணுகும் உரிமை எளிமையாக இருந்ததற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கண்ணகியின் உரையை கேட்ட உடனே மன்னன் தனது தவறை உணர்ந்தது நீதியின் உயர்ந்த தரத்தைக் காட்டுகிறது. நீதி வழங்கும் இடம் சமநிலை கொண்டதாக இருக்க வேண்டும். தங்கத் தராசு போல எந்தப் பக்கமும் சாயாமல் நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், நீதித்துறை கட்டமைப்பு நிலையானதாக இருக்கக்கூடாது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் முன்னேறும் வகையில் இருக்க வேண்டும். நீதிமன்றங்களின் இருப்பிடம், போக்குவரத்து வசதிகள் பொதுமக்கள் நீதியை அணுகுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீதித்துறையின் அதிகாரம் வெறும் அதிகாரம் மட்டும் அல்ல. அது ஒரு பொறுப்பும், உறுதியும் ஆகும். அநீதியால் ஏற்படும் துயரங்களை நீக்கும் கடமையாகவும் அது இருக்க வேண்டும். அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை நீதித்துறையின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப் பாட்டை காட்டுகிறது என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பேசுகையில், ‘புதிய கூடுதல் நீதிமன்ற கட்டிடம் தமிழக அரசு முதல் கட்டமாக ஒதுக்கிய ரூ.166 கோடியில் மூன்று மாடியில் 18 நீதிமன்ற அறைகள் கட்டப்பட்டுள்ளது. பத்து மாடி கட்டும் வகையில் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.230 கோடியில் 30 நீதிமன்ற அறைகள் கட்டப்படும். முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட நீதியில் 18 நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் எஞ்சிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படும். புதிய நீதிமன்ற கட்டிடங்கள், உயர் நீதிமன்ற அமர்வில் புதிய விருந்தினர் மாளிகை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க உதவிய தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறைக்கு நீதித்துறை சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், தனபாலன், மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் செல்வபாண்டி, மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் மோகன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற நீதிபதி வேல் முருகன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT