ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்.

 
தமிழகம்

தாம்பரம் தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி வீட்டை எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

தாம்பரம்: ​தாம்​பரம் தொகுதி திமுக வேட்​பாள​ராக மருத்​து​வர் கிருத்​திகா தேவி அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தற்​போதைய எம்​எல்ஏ எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் மீண்​டும் வாய்ப்பு கோரி டி.ஆர்​.​பாலு, ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசனின் வீடு​களை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்ள நிலை​யில், அதி​முக கூட்​ட​ணி, திமுக கூட்​ட​ணி, தவெக, நாம் தமிழர் கட்​சி​யினர் வேட்​பாளர்​களை அறி​வித்​துள்​ளனர்.

          

இதனிடையே திமுக​வில் வேட்​பாளர் பட்​டியல் குறித்த சலசலப்​பு​கள் எழத் தொடங்​கி​யுள்​ளன. மேலும், வெற்றி வாய்ப்​புள்ள தொகுதி கூட்​ட​ணிக்கு அளித்​ததும் கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில், தாம்​பரத்​தில் திமுக சார்​பில் மருத்​து​வர் கிருத்​திகா தேவி வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். அந்த அறி​விப்பு சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தாம்​பரம் தொகு​தி​யில் தற்​போது எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் எஸ்​.ஆர்​.​ராஜாவுக்கு மீண்​டும் வாய்ப்​பளிக்​கக் கோரி அவருடைய ஆதர​வாளர்​கள் கடந்த 2 நாட்​களாக தீவிரப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

ஏற்​கெனவே 3 முறை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்​.ஆர்​.​ராஜாவுக்கே மீண்​டும் வாய்ப்பு வழங்க வேண்​டும் என்​பது அவரது ஆதர​வாளர்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

இதனை வலி​யுறுத்​தி, அக்​கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​யான டி.ஆர்​.​பாலு மற்​றும் ஆர்​.எஸ்​.​பாரதி அமைச்​சர் அன்​பரசன் ஆகியோரின் இல்​லத்தை எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் முற்​றுகை​யிட்​டனர்.

போராட்​டத்​தின் போது, அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்கு எதி​ராக​வும் போராட்​டக்​காரர்​கள் கோஷங்​களை எழுப்​பிய​தால் அங்கு பரபரப்பு நில​வியது. வேட்​பாளரை மாற்​றி​விட்​டு, மீண்​டும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்​டும் என்று அவர்​கள் முழக்​கமிட்​டனர்.

இதே​போல், தலைமை நிலைய செயலர் ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசன் ஆகியோர் வீடு​களை​யும் எஸ்​.ஆர்​.​ராஜா ஆதர​வாளர்​கள் முற்​றுகை​யிட்​டனர். இதனைத் தொடர்ந்து அண்ணா அறி​வால​யம் சென்ற அவர்​கள் அங்​கும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்​டும் எனக் கூறி முழக்​கமிட்​டனர்.

பின்​னர் அ.ராசா அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதே​போல், பல்​லா​வரம் தொகுதி எம்​எல்​ஏ​வாக உள்ள இ.கருணாநி​தி, 2016, 2021 ஆகிய இரு​முறை வெற்றி பெற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், இந்த தேர்​தலிலும் இவருக்கே சீட் ஒதுக்​கப்​படும் என எதிர்​பார்த்​தனர். ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் இத்​தொகுதி தேமு​தி​க​வுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், திமுக​வினர் கடும் அதிருப்தி அடைந்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT