சுந்தர்.சி

 
தமிழகம்

“திட்டங்களை கொண்டு வர முடியாமல் உங்களை தடுப்பது யார்?” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு சுந்தர்.சி கேள்வி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை; ‘‘மதுரை மத்திய தொகுதிக்கு ஆளும்கட்சி அமைச்சராக இருந்தும் திட்டங்களை கொண்டு வர முடியாமல் உங்களை தடுப்பது யார்?, ’’ என்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 10 ஆண்டுகள் மத்திய தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆளும்கட்சி அமைச்சராக இருந்தே எதுவும் இந்த தொகுதிக்கு செய்ய முடியாவிட்டால் இனி என்ன செய்யப்போகிறார். சில திட்டங்களை நிறைவேற்றமுடியவில்லை. அதற்கு சில அரசியல் நிர்பந்தம், அழுத்தம் இருக்கிறது. அதனை வெளியே சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.

இதையெல்லாம், ஒரு எம்எல்ஏ, ஆளும்கட்சி அமைச்சர் சொல்கிற வார்த்தையா?. நிதியமைச்சராக இருந்த ஒருவர், அவரது தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது. தனக்கு நேரிட்ட நிர்பந்தம் என்ன என்பதை அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் வெளிப்படையானவர், உண்மையை சொல்லக் கூடியவர் என்று சொல்கிறார்கள் அல்லவா, அவர் உண்மையை சொல்ல வேண்டியதுதானே?

          

மதுரை மத்திய தொகுதியில் திட்டங்களை கொண்டு வருவதற்கு யார் உங்களை தடுப்பது?. நீங்கள் வருத்தப்படுவதால் உங்களுக்கு வாக்களித்த மக்கள் கேட்கிறார்கள். அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. அதைவிட்டுவிட்டு, கேள்வி கேட்கும் எங்களைப் பார்த்து அறியாமையில் கேட்கிறோம் என்று சொல்வது நியாயமா?. நாங்கள் அவரைப் போல் அமெரிக்கா, லண்டனில் சென்று மெத்த படித்தவர்கள் கிடையாது. ஆனால், மக்கள் பிரச்சினையை தெரிந்தவர்கள்.

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து உழைத்து முன்னேறி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவர்களும் தமிழகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுடனும் சண்டைப்போட்டுவிட்டு எதுவும் செய்ய விட மாட்டார்கள். ஐந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்து விட்டு முடியாது என்று சொல்லவதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்து சட்டபேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். இப்போது மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று எப்படி சொல்கிறீர்கள். மக்கள் ஏமாற தயாராக இல்லை. மக்கள் சக்தி என்ன என்பதை தேர்தலில் காட்டுவார்கள்.

நான் மத்திய தொகுதிக்கு போட்டியிட வந்தபோது மிக கடுமையான போட்டியிருக்கும் என்று கருதிதான் வந்தேன். ஆனால், தற்போது மக்கள் முகத்தை பார்க்கும்போதும், அவர்கள் பாசமாக என்னிடம் பேசுவதை பார்க்கும்போதும் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற வேகம் அவர்களிடம் தெரிகிறது. அவர்களுக்கு இந்த ஆட்சி மேல் மிகப்பெரிய கோபம் இருப்பதும் தெரிகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கை சுத்தம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், மாநகராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எல்லாம், அவரது ஆட்கள் தான். எதற்கெடுத்தாலும் புள்ளி விவரத்தை கூறும் அமைச்சர், அதை பற்றி வாய்திறக்கவில்லை. மக்களுக்கு தேவை புள்ளி விவரம் இல்லை. அவர்களுக்கு நல்ல திட்டங்கள்தான் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT