தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

நாளை ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நாளை நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ. சீனிவாசன் (65). சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில், ‘‘எனது மகன் பொறியியல் பட்டதாரி. அவருக்கு வேலை தேடிக்கொண் டிருந்தபோது, அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன் (66) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

அவர், அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் தனக்கு நெருக்கமானவர் என்றும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறினார்.

மேலும், அமைச்சர் சிவசங்கருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காண்பித்தார். அதை உண்மை என நம்பி, எனது மகனுக்கு வேலை வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்காக ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டார்.

ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி வழங்கவில்லை. இதையடுத்து, அப்போது அமைச்சராக இருந்த சிவசங்கரை நேரில் சந்தித்து, இளஞ்செழியன் ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டது குறித்து தெரிவித்தேன்.

அப்போது, ‘உங்கள் மகனுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்’ என்று உறுதியளித்தார். இதை நம்பி காத்திருந்தேன். ஆனால் எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும், என்னிடம் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை சிவசங்கருக்கும் கொடுத்ததாக இளஞ்செழியன் தெரிவித்தார்.

எனது மகனுக்கு வேலை கிடைக்காததுடன், ரூ.23 லட்சத்தையும் இழந்துள்ளேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இளஞ்செழியனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் சிவசங்கரிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜூலை 1-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT