| படம்: ம.பிரபு |
சென்னை: கடந்த ஒரு வாரமாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
வட தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இல்லாத நிலையில், பல நாட்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் குறிப்பிடும் படியான மழைப்பொழிவு இல்லை.
கடந்த இரு வாரங்களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவில் கடும் புழுக்கமும் நிலவியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. வில்லிவாக்கத்தில் 3 செமீ, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், மாதவரத்தில் தலா 2 செமீ, புழலில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மாலை நேரத்தில் மழை பெய்ததால் அலுவலகம் பணி முடித்து வீட்டுக்கு திரும்பியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. எனினும், கடந்த 2 வாரங்களாக கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளான மக்கள், திடீர் மழையால் குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர்.