சென்னை: போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து, சென்னை, ராமநாதபுரம் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிசாருதீன் மற்றும் சையத் ஆகியோர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. இருவருடைய வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்த மாவடியைச் சேர்ந்த புல்லட் மகாலிங்கம் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் மகாராஷ்டிர சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.
புல்லட் மகாலிங்கத்தின் வீடு, தோட்டம் மற்றும் அவரது சகோதரர் இல்லங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது நண்பர் புதுப்பள்ளி ராஜ் மற்றும் வடக்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த உறவினர் சரண்ராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தொழிலதிபர் அக்பர் என்பவரது இல்லம், திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற எஸ்பி எத்திராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவரின் வீடு, செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆற்றந்தாங்கல் பகுதியில் உள்ள கண்ணன் என்பவரது வீடு மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.