பழநி: பழநி அருகே காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் ராஜகோபால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிதடி பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை நேரில் சந்தித்து அப்பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காவலர் ராஜகோபால் விசாரணை நடத்தினார்.
பின்னர், அந்தப் பெண்ணின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு ஆபாசமாக காவலர் ராஜகோபால் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தனது குடும்பத்தாரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்பி மற்றும் பழநி டிஎஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்தனர்.
பணி நீக்கம்: இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர், டிஐஜி உத்தரவின் பேரில் ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 5 மாதங்கள் ஆன நிலையில் நேற்று ராஜகோபாலை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பழநி காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.