

புதுச்சேரி: காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பணியாற்றினர்.
புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் செவிலிய அதிகாரிகள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதையடுத்து செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நீண்ட காலமாக காலியாக உள்ள செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், தகுதியுள்ள செவிலிய அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். செவிலியர் பணியிடங்களுக்கான பதவி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்றினர்.
இது குறித்து செவிலியர் சங்கத் தலைவர் சுனிலா குமாரி, செயலர் ஹரிதாஸ் கூறுகையில், “அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான செவிலிய அதிகாரிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, இன்றும் நாளையும் செவிலிய அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்துகிறோம்" என்றனர்.