ஹரீஷ்
பூந்தமல்லி: அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியின்போது 15 வயது மாணவர் மூளைச் சாவு அடைந்தார். அம்மாணவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு(45). இவர் செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ரேஷ்மி(41). சென்னை, அம்பத்தூரில் ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வரும் இத்தம்பதியின் மகன் ஹரீஷ் (15) சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற ஹரீஷ், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கடந்த 12-ம் தேதி அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஹரீஷ் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் ஹரிஷை மீட்டு, அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரீஷ் நேற்று முன்தினம் இரவு மூளைச் சாவு அடைந்தார்.
இதையடுத்து ஹரிஷின் பெற்றோர், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம்செய்ய விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஹரிஷின் கண், இருதயம், கணையம், சிறுநீரகங்கள், குடல் உள்ளிட்ட 7 உறுப்புகளை நேற்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்து, மாற்று நபர்களுக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பிறகு ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.