முகேஷ்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கபடி விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் லாலா ஏரி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையே கபடிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில் வட்டார அளவிலான அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகள் என 36 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதில், திம்மாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் திகுவாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் முகேஷ் (17) கபடிப் போட்டியில் நேற்று விளையாடினார். அப்போது மாணவர் முகேஷ் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.