

சென்னை: மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தரவு ஆதாரமாகும்.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான அரசுத் திட்டங்களை வடிவமைப்பது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, இந்தியாவில் முதல்கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (வீடுகள் பட்டியலிடுதல்) கடந்த ஏப். 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
தமிழகத்தில் முதல்கட்ட கணக்கெடுப்பான களப்பணிகள் ஆக. 1-ம் தேதி முதல் தொடங்கியன. வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கு
முன்னதாக, நடப்பாண்டில் ஜூலை 17 முதல் 31-ம் தேதி வரை சுய கணக்கெடுப்புக்கான தளம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்ப விவரத்தை அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.
முதல்கட்ட கணக்கெடுப்பு பணிகளில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 1.15 லட்சத்துக்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்களும் 19 ஆயிரத்துக்கும் அதிகமான மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பு பணியின்போது, கணக்கெடுப்பாளர்கள் 33 முக்கியக் கேள்விகளுக்கு பதில்களை சேகரித்தனர். இப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம்.சுந்தரேஷ்பாபு கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்கட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவு செய்வதை உறுதிசெய்த அனைத்துக் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், நிர்வாகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, முயற்சிகளுக்கு பாராட்டுகள்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான இந்த முக்கியத் தரவு சேகரிப்புப் பணிக்காக அளிக்கப்பட்ட விலை மதிப்பற்ற ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் மக்கள், மாநில அரசு உள்பட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.
ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் தங்கள் விவரங்களை சமர்ப்பித்துள்ளன. முதல்கட்ட கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்ப தரவுகளை இணைக்கும் பணி ஒரு சில நாட்கள் நடைபெறும்.
1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, இந்த செயல்பாட்டின் போது சேகரிக்கப்படும் அனைத்துத் தனிநபர் பதில்களும் ரகசியமாக வைக்கப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.