“தமிழக மக்களின் ஒற்றுமை பலம் தான் திமுக கூட்டணியின் பலம். எனவே, பாஜக எந்த வழியில் வந்தாலும் எத்தகைய சூழ்ச்சி செய்தாலும் அது தோற்கடிக்கப்படும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
நேற்று கோயில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன் கூறியதாவது: திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்துவைத்துள்ளது மிகச்சிறப்பு. கேரளாவில் நாங்கள் தோற்றுவிட்டது போல் பிம்பம் கட்டமைக்கின்றனர். அங்கே நாங்கள் 49 சதவீதம் பெற்றோம் என்றால், காங்கிரஸ் 51 சதவீதம் பெற்றுள்ளது. அந்தத் தோல்வியை ஏற்கிறோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அங்கு இடதுசாரி கூட்டணி வெற்றிபெறும்.
கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவை பிஹார் வெற்றியுடன் ஒப்பிட்டு, பிஹார் தேர்தல் போல் தமிழக தேர்தலும் அமையும் என உள்துறை அமைச்சர் பேசுவது நகைப்புக்குரியது. திமுக கூட்டணி தான் தமிழ்நாட்டில் வெல்லும். அதற்கு, திமுக தலைமையிலான கூட்டணியின் பலம் மட்டும் காரணமல்ல. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களும் ஒரு காரணம்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே பிரிவினை கருத்துகளை ஏற்கமாட்டார்கள். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் சார்பில் ஒரு பதற்ற அரசியலை முன்வைக்கின்றனர். அதற்கு திருப்பரங்குன்றமே சான்று. இதுபோன்ற பதற்ற அரசியலை, பிளவு அரசியலை தமிழக மண் ஏற்காது. எங்கள் கூட்டணி பலத்தை விட தமிழக மக்களின் ஒற்றுமை பலம் தான் திமுக கூட்டணியின் பலம். எனவே, பாஜக எந்த வழியில் வந்தாலும், எத்தகைய சூழ்ச்சி செய்தாலும் அது தோற்கடிக்கப்படும்.
சாதியால், மதத்தால் யார் மக்களை பிளவு படுத்துகின்றனரோ அவர்கள் தான் தீயசக்தி. திமுக ஒரு மக்கள் சக்தி, ஜனநாயக சக்தி. நடிகர் விஜய் அரசியலில் முதல் அடியை எடுத்து வைக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய அனுபவங்களும் அதிகம் இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்குவது கம்யூனிஸ்ட்களும், இடதுசாரி சிந்தனை உள்ளவர்களும் தான். மத்திய அரசு மாநிலங்களை அடக்கி ஆள நினைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், ஜனநாயகத்தைக் காக்கவும் தொடங்கி உள்ள போரில் நாங்கள் அவருடன் நெருக்கமாக உள்ளோம். அதேசமயம், அரசு ஊழியர் கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.