இடது: முதல்வர் ஸ்டாலின் | வலது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: “உங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ‘இந்தித் திணிப்பு’ வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள்” என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறும் ‘திணிப்பு’ என்ற வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி. தேசிய கல்விக் கொள்கை உண்மையில், மொழி விடுதலைக்கான ஒரு பிரகடனமாகும்.
ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமது பெருமைமிக்க மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அது தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரு நெகிழ்வான கொள்கையை ‘கட்டாய இந்தி’ என்று தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை; மாறாக, நமது இளைஞர்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை உருவாக்குகிறீர்கள்.
பன்மொழித் தன்மையை ஓர் அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானதாகும். கூடுதல் மொழிகளைக் கற்பதால் தமிழ் பலவீனமடைவதில்லை. மாறாக, தமிழ் மொழி பேசுவோர் பன்மொழித் திறன் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மொழிரீதியாக வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும்போது அம்மொழி செழுமையடைகிறது.
தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துவதோடு, தற்போதுள்ள இருமொழி அமைப்பின் வரம்புகளையும் நிவர்த்தி செய்கிறது. சமக்ர சிக்ஷா, ஆசிரியர் பயிற்சி, மற்றும் NPST, NMM போன்ற தேசிய கட்டமைப்புகளுடன், DIET-கள் போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகளை செயல்படுத்துவதிலும் இது மேலும் கவனம் செலுத்துகிறது.
பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த உங்கள் கேள்விகள் கள யதார்த்தத்தைப் புறக்கணிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காசி தமிழ்ச் சங்கம் முதல் உலக அரங்கம் வரை தமிழ் ஒரு தேசியப் பொக்கிஷமாகப் போற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், உங்கள் அரசு பிரிவினைவாத வாக்கு வங்கிப் பிரச்சாரத்துக்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
உங்களின் வளர்ச்சி பற்றிய பேச்சு வெறும் வெளிவேஷமே. தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பின்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அதனைத் தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், உங்கள் அரசு கல்வி சமத்துவத்தை விட அரசியல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை தொடர்ந்து தடுத்து வருகிறது.
வேண்டுமென்றே செய்யப்படும் இதுபோன்ற எதிர்ப்பு என்பது வெறும் நிர்வாக மீறல் மட்டுமல்ல. இது, தரமான, தகுதி அடிப்படையிலான கல்வியால் பயனடையக்கூடிய லட்சக்கணக்கான நலிந்த மாணவர்களுக்குச் செய்யும் நேரடித் தீங்காகும்.
இது, தனது மாணவர்களுக்கான நவீன உள்கட்டமைப்பையும், ஆசிரியர்களையும் திறம்படத் தடுத்து நிறுத்தியுள்ளது. மத்திய அரசு நிதியுதவி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது. ஆனால் உங்கள் நேர்மையற்ற அரசியலால் மாணவர்களின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.
ஒரு முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தத்தை ‘மொழித் திணிப்பு’ என்று தவறாகச் சித்தரிப்பது, தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தையே கொண்டுள்ளது. உங்களின் உண்மையான கவலை என்பது இக்கொள்கையின் தெளிவு குறித்ததல்ல. மாறாக, முதல்வர் ஸ்டாலின் இதனை அங்கீகரிக்கத் தயங்குவது குறித்ததாகவே இருக்கலாம்.
இதன் மூலம், இந்தியாவின் மொழிப் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு உணர்வை அவர் புறக்கணிக்கிறார். நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ‘இந்தித் திணிப்பு’ வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?
முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.
“இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்.
தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத - தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்.
ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது.
இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் - விஷுவல் எஃபக்ட்ஸ் - கேமிங் - காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான - ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.
இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும்.
பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா?” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.