சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணலி மண்டலம் ஆமுல்லைவாயல் பாலம் பகுதியில் புழல் உபரிநீர் கால்வாயில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள், ட்ரோன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள், அம்மண்டலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, வெள்ள நிவாரண மையம் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் 219 இடங்கள் மழைநீர் அதிக அளவில் தேங்கும் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, மழைநீர் தேக்கம், மக்களின் பாதிப்பு நிலை குறித்து நேரலையில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மண்டலத்திலும் 2 ட்ரோன்களை ஏற்பாடு செய்து, அந்த ட்ரோன்கள் மூலமாக வாகனங்கள் உள்ளே அல்லது உடனே போக முடியாத வெள்ளநீர் பாதித்த பகுதிகளை ட்ரோன் மூலமாக அணுகி, கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று இப்பணிகள் சோதித்தும் பார்க்கப்பட்டது. ட்ரோன் காட்சிகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்கப்பட்டன.
தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இது டெங்கு பரவலுக்கு சாதகமான சூழல். அதனால் 3700 மலேரியா பணியாளர்கள் களமிறக்கப்பட்டு, தீவிர கொசு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகை பரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தினமும் 106 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
சென்னை புறநகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை போன்ற அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு நிலவரம் நேரலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிவாரண பணிகளில் ஈடுபட, 7 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் 15 ஆயிரம் பேர் வரை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். 113 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதை 250 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
15 கட்டுப்பாட்டு அறைகள்: வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்தந்த மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர புகார்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
திருவொற்றியூர்- 94451 90201, மணலி- 94451 90202, மாதவரம்- 94451 90203, தண்டையார்பேட்டை- 94451 90204, 89258 19481, ராயபுரம்- 94451 90205, திருவிக நகர்- 94451 90206, அம்பத்தூர்- 94451 90207, அண்ணா நகர்- 94451 90208, தேனாம்பேட்டை- 94451 90209, கோடம்பாக்கம்- 94451 90210, வளசரவாக்கம்- 94451 90211, ஆலந்தூர்- 94451 90212, அடையாறு- 94451 90213, பெருங்குடி- 94451 90214, சோழிங்கநல்லூர்- 94451 90215.