சென்னை: திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் கதையின் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பாக தனி நபர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியிருப்பது தேவையற்றது எனக் கூறி, அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “எந்திரன் படக்கதை விவகாரத்தில் ஷங்கருக்கு எதிரான வழக்குகளை புகார்தாரர் திரும்பப் பெற்றுவிட்டதால் மூல வழக்கு எதுவும் இல்லை” என்றார்.
இதுதொடர்பாக, விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தடையை நீட்டித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-க்கு தள்ளி வைத்தனர்.