புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனுவை திரும்ப பெற அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்சலை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள், பெண்கள் என மொத்தம் 27 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஏ.எஸ்.சந்துருக்கர் அடங்கிய அமர்வு கடந்த மே 21-ம் தேதி விசாரித்தது. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளதால் இந்த விவகாரத்தில் குறிப்பாக சிபிஐ விசாரணை தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விளக்கம் கேட்டு தெரிவிக்க விரும்புவதாக அரசு தரப்பு வாதிட்டதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், விளக்கம் கேட்டு தெரிவிக்க அனுமதி அளித்ததுடன் விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்தது.அதுவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு விதித்த இடைக்கால தடை தொடரும் என்றும் தெரிவித்தது.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் பி. கருணாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனுவை திரும்ப பெற அனுமதி கோரப்பட்டுள்ளது.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு
இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி முந்தைய திமுக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் கூறியதாவது:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2 முறை முறையிட்டு தோல்வி அடைந்த பிறகும் விடாமல் 3-வது முறையாக மேல்முறையீடு செய்து, சிபிஐ விசாரணைக்கு தடை பெற்றது.
குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அரசு நிதியை வீணடித்து இந்த நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டது. முன்னாள் திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோருக்கு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், மேல்முறையீட்டு வழக்கை தவெக அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதற்காக, முதல்வர் விஜய்க்கு நன்றி. நீதி கிடைக்கும் என நம்புகிறோம். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.