தமிழகம்

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஒரு இடம்கூட வீணாகக் கூடாது. எனவே, அதற்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் பொது மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுப்பதால் 1,857 உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், தமிழகத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடக்கம்.

‘ஜீரோ பர்சன்டைல்’

இதுதொடர்பான வழக்கில் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரதமர் மோடி இதில் உடனே தலையிட்டு, முந்தைய ஆண்டுகளில் செய்ததுபோல ‘ஜீரோ பர்சன்டைல்’ அளவுக்கு தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்.

மேலும், இடங்களை நிரப்ப இயலாமல் போகும் நிலையில், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே அவர்களுக்கான தகுதி மதிப் பெண்ணை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

மக்களுக்கு உயர் சிறப்பு மருத்துவர்களுக்கான தேவை பெரிதும் இருக்கும்போது, நாட்டின் விலைமதிப்பற்ற சொத்தான மருத்துவப் படிப்புக்கான ஒரு இடம்கூட வீணாகக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT