தமிழகம்

“இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம்” - ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: ‘திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது, இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட, காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் தனது ஆதரவாளர்கள் 1,500 பேருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்துக்குப் பிரிந்து போகிறார்கள் என்றால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து ஆளுங்கட்சியை நோக்கிதான் செல்வார்கள். இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல. ஒரு எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், பதவிக்காக வரவில்லை. தமிழ் சமுதாயத்துக்காகப் பாடுபட வேண்டும், இந்த இயக்கத்துக்காக துணை நிற்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். உங்களை நான் வரவேற்கிறேன்.

வெற்றி தோல்வி என்பது திமுகவைப் பொறுத்தவரை மாறிமாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவர்கள்தான் திமுகவினர். இன்றைக்கு திமுக வெற்றி வாய்ப்பைஇழந்து, ஆட்சிப் பொறுப்பை இழந்து, எதிர்க்கட்சி என்ற நிலையில் பணியாற்றி கொண்டிருக்கும் இச்சூழலில், நீங்கள் அனைவரும் திமுகவுக்கு வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

தோல்வி பற்றி கவலை வேண்டாம்: திமுகவின் தோல்வி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது ஆட்சி நடப்பதே திமுக தயவில்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், திமுக வெற்றிபெற வேண்டும். திமுக தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்று கருதி திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, “நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம்” என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார்கள்.

ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: அவர்கள் தாங்கள் எடுத்துள்ள முடிவை என்னிடத்தில் சொன்னபோது, “நீங்கள் செல்லுங்கள் அது உங்களுடைய விருப்பம். உங்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தை நான் தடுக்க மாட்டேன். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது. அதன்மூலமாக பாஜக ஆட்சி தமிழகத்தில் வந்துவிடக் கூடாது’’ என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தேன். எனவே, திமுக தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் இந்நிகழ்வில் உறுதி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT