மு.க.ஸ்டாலின்

 
தமிழகம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்: ஆளுநருக்கு கடிதம்

மோகன் கணபதி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. தவெக தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பிவைத்தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் 108 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 5, பாட்டாளி மக்கள் கட்சி 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, பாஜக 1, தேமுதிக 1, அமமுக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் தவெக இருப்பதால், அக்கட்சி பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அர்லேகருக்கு மின்னஞ்சல் மூலமாக ஸ்டாலின் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT