சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக சிறந்த முறையில் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் உகந்த பணியிடங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதுடன், தனியார் துறைகளிலும் பணியமர்த்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2.11 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, கீதாஜீவன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, மேயர் பிரியா, தலைமைச்செயலர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.