பொங்கலன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்.
மதுரை: மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலோடு, அரசு சார்பில் நடத்தப்படும் இப்போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் சிறந்த 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
இதைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் பதிவு செய்துள்ளனர்.தென் மண்டல ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்படுகிறது. 2-ம் பரிசு பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு பைக்குகளும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறும் காளைக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் ஸ்கூட்டர், பசு கன்று, பீரோ, டிவி, சைக்கிள்கள், தங்க நாணயங்கள், மெத்தை, கட்டில் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கு மேலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக அதிக காளைகளைஅடக்கும் முதல் 3 வீரர்களுக்குரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் என ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.