தமிழகம்

திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை: 100 தொகுதிகளில் நிறைவு

செய்திப்பிரிவு

‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கிய இந்த உடன்பிறப்பே வா நிகழ்வில், இதுவரை 100 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் உரையாடியுள்ளார்.

சந்திப்பின் போது, சட்டப்பேரவை தொகுதி வெற்றி நிலவரம், எஸ்ஐஆர் பணிகள், அரசு திட்ட செயல்பாடுகள், மாவட்ட அமைச்சர், தொகுதி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.

அதே நேரம், புகார்கள் வரும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடலூர், புவனகிரி, மயிலம் சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாகிகளை ஒவ்வொருவராக அழைத்து தனித்தனியாக சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டார். ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்த பட்சம் ஒன்றரை மணிநேரம் முதல்வர் செலவிட்டார்.

சந்திப்பின் போது, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. அனைவரும் தேர்தல் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கோஷ்டி பிரச்சினைகளை வெளிக்காட்டாமல், நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதுவரை 100 தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில், நிர்வாகிகள் தெரிவிக்கும் தொகுதி சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகளையும் தனித்தனியாக பிரித்து, அவை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது, கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT