மாநகர திமுக செயலாளர் கோ.தளபதியை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை: மதுரை திமுகவில் எதிரும், புதிருமாக இருந்த மாநகர செயலாளர் தளபதியும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் தங்களது அதிருப்தியை மறந்து ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையே பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக ஸ்டாலின் ஆதரவாளர்களும், சுந்தர். சி-க்கு ஆதரவாக அதிமுகவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்களும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2021-ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜனின் செல்வாக்கு கட்சியிலும் ஆட்சியிலும் கொடிகட்டிப் பறந்தது.
முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்ததால், கட்சியில் மூத்தவர்கள் பலர் இருந்தும் நிதி அமைச்சர் பொறுப்பு பழனிவேல் தியாகராஜனுக்கு தேடி வந்தது.
தொடர்ந்து நடந்த மாநகராட்சி தேர்தலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கைகாட்டிய இந்திராணி மேயராகவும், மண்டலத் தலைவர்கள், கவுன் சிலர்கள், பகுதிச் செயலாளர்கள், கிளைச் செயலாளராக திமுகவில் பதவிகளை பிடித்தனர். மாநகராட்சி நிர்வாகம், மாநகர திமுக செயல்பாடுகள் பழனிவேல் தியாகராஜன் கண் அசைவில் நடந்தன.
இதனால், திமுக மாநகரச் செயலாளர் கோ.தளபதிக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மோதலானது. கட்சிரீதியிலான பிரச்சினையில் சிக்கியதால், தியாகராஜன் நிதி அமைச்சர் பதவி பறிபோனது.
மதுரை மாநகர திமுக செயலாளர் தேர்தலில் பழனிவேல் தியாகராஜன் தனது ஆதரவாளர் அதலை செந்திலை கொண்டு வர முயன்றார். இதில் தளபதிக்கு ஏகப்பட்ட மனவருத்தம். நிலைமையை கவனித்த கட்சி மேலிடம் தேர்தலை நடத்தாமலேயே தளபதியை மீண்டும் மாநகரச் செயலாளராக்கியது.
கட்சி, ஆட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால் பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுகவிலும், மாநகராட்சி நிர்வாகத் திலும் தலையிடுவதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அவரது ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் தளபதியிடம் நெருக்கமானார்.
தன்னிடம் மேயர் பதவி பெற்றவர்களே தனக்கு எதிராகத் திரும்பியதால் அதிருப்தியடைந்த பழனிவேல் தியாகராஜன், கட்சியில் தனக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தி பொன்.வசந்த்தை கட்சியை விட்டு நீக்க வைத்ததோடு மேயர் பதவியையும் காலி செய்தார்.
முன்னாள் துணை மேயரும், அழகிரி ஆதரவாளராக இருந்தவருமான பி.எம்.மன்னனை சந்தித்த சுந்தர்.சி, ஏ.சி. சண்முகம்.
அதேநேரம் மத்திய தொகுதியில் தளபதி ஆதரவு திமுக கவுன்சிலர்கள், பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். இந்த சூழல் தனது தேர்தல் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை அமைச்சர் உணர்ந்தார். பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி இருவரையும் மதுரை வந்தபோது சந்தித்த முதல்வரின் மருமகன் சபரீசன் சமாதானம் செய்தார்.
எனினும் மத்திய தொகுதியில் சீட் கேட்டு 15-க்கும் மேற்பட்டோர் அமைச்சருக்கு போட்டியாக விருப்பமனு வழங்கினர். எனினும் பழனிவேல் தியாகராஜனுக்கே வேட்பாளர் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையே இந்த முறை அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பிஎம்.மன்னன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலரும் பழனி வேல் தியாகராஜனுக்கு எதிராக தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் சுந்தர். சி-யை அழைத்துக் கொண்டு தொகுதியில் ஆதரவு திரட்டி வருகின்றனர். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் நடிகை குஷ்பு பிரச்சார திட்டம், அழகிரி ஆதரவாளர்களின் தேர்தல் பணி அமைச்சருக்கு கேடும் போட்டியை உருவாக்கும் என கட்சியினர் கணிக்கின்றனர்.
அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என முடிவு செய்த அமைச்சர், மாநகர திமுக செயலாளர் தளபதி, இவரும் பரஸ்பரம் சந்தித்து சமாதானமாகி உள்ளனர்.
மத்திய தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக வியூகங்களை வகுத்து வருகின்றனர். தளபதி ஆதரவு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் தற்போது பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பணியாற்றத் தொடங்கி உள்ளனர்.
அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே யார் பெரியவர் என்ற போட்டியும் உருவாகியுள்ளது.