பழனியாண்டி
கரூர்: குளித்தலை அருகே கல் குவாரியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ, தனது மகனுடன் கரூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அருகே ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விமலாதித்தனுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.
இங்கு விதிகளை மீறி கல் வெட்டி எடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கடந்த ஜன. 30-ம் தேதி திருச்சியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன்(45), ஒளிப்பதிவாளர் செபாஸ்டின்(47) உள்ளிட்டோர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் மற்றும் கல் குவாரி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்களைத் தாக்கி, கேமரா, செல்போன்களை பறித்து விட்டதாக குளித்தலை போலீஸில் கதிரவன் புகார் அளித்தார். அதேபோல, செய்தியாளர் தரப்பினர் தங்களை தாக்கியதாக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விமலாதித்தன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் உள்ளிட்டோர் மீது, ஆபாசமாகத் திட்டி தாக்கியது உள்ளிட்ட 4 பிரிவுகளிலும், விமலாதித்தன் அளித்த புகாரின்பேரில் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் உள்ளிட்டோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது உள்ளிட்ட 4 பிரிவுகளிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கரூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1-ல் மாஜிஸ்திரேட் பரத்குமார் முன்னிலையில் எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் உள்ளிட்ட 3 பேர் நேற்று சரணடைந்து, பிணை உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.