சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் சட்டவிரோத வாக்குரிமை இருப்பதை கண்டறிந்த அமலாக்கத் துறை, வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணன் (53). இவர், போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றபோது 2021-ல் தமிழக ‘கியூ’ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின், அவரது நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின் பின்னணியில், டென்மார்க்கில் பதுங்கி இருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமாகாந்தன் இருப்பது தெரியவந்தது. இதனால், என்ஐஏ அவர்களை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தது. அப்போது, மும்பையில் உள்ள வங்கிக்கணக்கில் இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவருக்கு, மேரி பிரான்சிகா லட்சுமணன், லட்சக்கணக்கில் பணம் அனுப்பியதும், அதற்கு இவரின் நண்பர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. அமலாக்கத் துறை விசாரணையில், மேரி பிரான்சிஸ்கா 2019-ல் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்தத தெரிந்தது. விசா காலம் முடிந்தும், அவர் இலங்கை செல்லாமல், சென்னை சாலிகிராமத்தில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். வீட்டில் மின் இணைப்பு கட்டண ரசீது மூலம், வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது எஸ்ஐஆர் பணிமூலம், மேரி பிரான்சிஸ்காவுக்கு இன்னமும் வாக்கு அளிக்கும் உரிமை இருப்பதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. இதை குறிப்பிட்டு, அவரது வாக்கை நீக்குமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தற்போது அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.