

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்த் தேக்கங்கள், ஏரிகளின் முழு கொள்ளளவில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை நீர் அளவை குறைத்து வைக்குமாறு பொறியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் தற்போதைய நீர் இருப்பு நிலவரம், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. தாமிரபரணியில் ஏற்கெனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் மழைப்பொழிவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
பெரு வெள்ளம் ஏற்பட்டால், நிலைமையை துரிதமாக சமாளிக்கவும் கண்காணிக்கவும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் ஏதுவாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களுக்கு தனித்தனி குழுக்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் நீர் இருப்பில் முழு கொள்ளளவில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை குறைத்து, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். எதிர்பாராத வகையில் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தயார்நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.