ராமேசுவரம்: தமிழகம், புதுவை மீனவர்கள் 25 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்தது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காசாக் குடிமேடு, மயிலாடு துறை, நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான் பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஒரு படகிலும் காரைக்கால், நாகை நம்பியார் நகர், சீர்காழி திருமுல்லைவாசல் பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றொரு படகிலும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர்.
கடந்த பிப். 16 அன்று இவர்களை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறை பிடித்து நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீனவர்களின் காவல் நேற்று (செவ்வாய்கிழமை நிறை வடைந்ததை தொடர்ந்து 25 பேரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 25 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.