தமிழகம்

12 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

உடனடியாக மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம் / சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, படகிலிருந்த கபில் ரோச்சர், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ்ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகர்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

          

கைது செய்யப்பட்ட படகையும், 12 பேரையும் இலங்கையிலுள்ள நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு சென்று அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 12 பேர் மீதும், எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் நீர்கொழும்பு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாம்பன் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து, இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தைச் சேர்ந்த 259 மீன்பிடி படகுகளும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 116 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறையில் காவலில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு: மீனவர்கள் கைது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்துப் பேசினார்.

அப்போதுகூட தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து பேசியதாகத் தகவல் இல்லை. கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க, பாஜக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் கோரிக்கை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில்,‘‘இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப் பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க வேண்டும். தமிழக அரசும் மீனவர்களின் வாழ்வாதாரத் தைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT